Overseas Sri Lanken Muslim community

ஆயிரம் பூக்கள் மலரட்டும்

ஒட்டுமொத்த தமிழ் இனத்தையும் பயங்கரவாதிகளாக சித்தரித்த ஒரு உக்கிர உள்நாட்டு போர் முடிந்த மறுகணமே முஸ்லீம்களை பயங்கவாதிகள் என்று முத்திரை குத்தும் முனைப்புக்கள் தொடங்கிவிட்டன.... எமது அரசியல் பிரதிநிதிகளில் பலர் இயலாமை, அறிவீனம், சுயநலம் என்பவற்றின் வாரிசுகள்…!! இந்த நிலையில், இலங்கை முஸ்லீம் சமூகம் உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் தன்வசம் இருக்கும் அறிவார்ந்த, சமூக அக்கறை உள்ள அனைத்து சக்திகளையும் ஒன்றிணைத்து முறையான ஒரு தடத்தில் பயணிப்பதன் மூலம் மட்டுமே எம்மை சுற்றி விரிக்கப்படும் வலைகளில் இருந்து விடுபட முடியும். அமைதியும் சமாதானமும் நிறைந்த ஒரு சுபீட்சமான தாய்நாடு, வெளிநாடுகளில் வாழும் ஒவ்வொரு இலங்கையாரினதும் கனவு என்பதில் சந்தேகம் இல்லை. அண்மைய காலங்களில் முஸ்லிம்களுக்கு எதிராக கட்டவிழ்த்து விடப்பட்ட வன்முறைகளின் பின்னர் ஊடகங்களிலும் சமூக வலைத்தளங்களிலும் ஏராளமானோர் முஸ்லிம்களுக்காக தங்களால் முடிந்த பங்களிப்பை செய்தார்கள். செய்திகளும் புகைப்படங்களும் உடனுக்குடன் உலகம் எங்கும் பரவின..கோபத்தையும், கவலையையும், மனக்குமுறலையும் பரிமாரிக்கொண்டோம்…இப்படியான முயற்சிகள் மேலும் வளரட்டும் ….ஆயிரம் பூக்கள் மலரட்டும்….!! எம் கவலையும் கொந்தளிப்பும் வெறுமனே ஒரு தேரரை வார்த்தைகளால் துகில் உரிவதோடு மட்டும் நின்றுவிடாமல் எமது சமூகத்துக்கான ஒரு ஒருங்கிணைகப்பட்ட அரசியல் கட்டமைப்பையும், ஊடகங்களையும் வளர்க்கவேண்டியது அவசியம்... உலகம் முழுவதும் பரந்து வாழும் இலங்கை முஸ்லிம்கள் அனைவரையும் தாய் நாட்டு நிலைமைகளோடு தொடர்புபடுத்தும் அதே நேரம் நாம் புலம் பெயந்து வாழும் சமூகங்களில் உள்ள சவால்கள், வாய்புகள் மற்றும் கலாசார அனுபவங்களை பரிமாறிகொள்ளூம் ஒரு இடமாகவும் இந்த இணையத்தளம் இருக்கும். இலங்கை, மத்தியகிழக்கு நாடுகள், கனடா, மற்றும் ஐரோப்பாவில் வாழும் இலங்கை முஸ்லிம் சமூகத்தின் மீது அன்பும் அக்கறையும் கொண்ட பல்வேறு துறைகளில் அனுபவம் உள்ள ஒரு குழுவினரால் இந்த இணையத்தளம் நடத்தப்படும்.